Responsive image

திருமங்கை_ஆழ்வார்

பெரிய திருமொழி.741

பாசுர எண்: 1688

பாசுரம்
தந்தை காலில் விலங்கறவந்து
தோன்றிய தோன்றல்பின், தமியேன்றன்
சிந்தை போயிற்றுத் திருவருள்
அவனிடைப் பெறுமள விருந்தேனை,
அந்தி காவலனமுதுறு
பசுங்கதி ரவைசுட அதனோடும்,
மந்த மாருதம் வனமுலை
தடவந்து வலிசெய்வ தொழியாதே. (2) 8.5.1

பெரிய திருமொழி.742

பாசுர எண்: 1689

பாசுரம்
மாரி மாக்கடல் வளைவணற்
கிளையவன் வரைபுரை திருமார்பில்,
தாரி னாசையில் போயின
நெஞ்சமும் தாழ்ந்ததோர் துணைகாணேன்,
ஊரும் துஞ்சிற்றுலகமும்
துயின்றது ஒளியவன் விசும்பியங்கும்,
தேரும் போயிற்றுத் திசைகளும்
மறைந்தன செய்வதொன் றறியேனே. 8.5.2

பெரிய திருமொழி.743

பாசுர எண்: 1690

பாசுரம்
ஆயன் மாயமே யன்றிமற்
றென்கையில் வளைகளும் இறைநில்லா,
பேயின் ஆருயி ருண்டிடும்
பிள்ளைநம் பெண்ணுயிர்க் கிரங்குமோ,
தூய மாமதிக் கதிர்ச்சுடத்
துணையில்லை இணைமுலை வேகின்றதால்,
ஆயன் வேயினுக் கழிகின்ற
துள்ளமும் அஞ்சேலென் பாரிலையே. 8.5.3

பெரிய திருமொழி.744

பாசுர எண்: 1691

பாசுரம்
கயங்கொள் புண்தலைக் களிறுந்து
வெந்திறல் கழல்மன்னர் பெரும்போரில்,
மயஙகவெண்சங்கம் வாய்வைத்த
மைந்தனும் வந்திலன், மறிகடல்நீர்
தயங்கு வெண்திரைத் திவலைநுண்
பனியென்னும் தழல்முகந் திளமுலைமேல்,
இயங்கு மாருதம் விலங்கிலென்
ஆவியை எனக்கெனப் பெறலாமே. 8.5.4

பெரிய திருமொழி.745

பாசுர எண்: 1692

பாசுரம்
ஏழு மாமரம் துளைபடச்
சிலைவளைத் திலங்கையை மலங்குவித்த
ஆழி யான்,நமக் கருளிய
அருளொடும் பகலெல்லை கழிகின்றதால்,
தோழி. நாமிதற் கென்செய்தும்
துணையில்லை சுடர்படு முதுநீரில்,
ஆழ ஆழ்கின்ற ஆவியை
அடுவதோர் அந்திவந் தடைகின்றதே. 8.5.5

பெரிய திருமொழி.746

பாசுர எண்: 1693

பாசுரம்
முரியும் வெண்டிரை முதுகயம்
தீப்பட முழங்கழ லெரியம்பின்,
வரிகொள் வெஞ்சிலை வளைவித்த
மைந்தனும் வந்திலன் என்செய்கேன்,
எரியும் வெங்கதிர் துயின்றது
பாவியேன் இணைநெடுங் கண்துயிலா,
கரிய நாழிகை ஊ ழியில்
பெரியன கழியுமா றறியேனே. 8.5.6

பெரிய திருமொழி.747

பாசுர எண்: 1694

பாசுரம்
கலங்க மாக்கடல் கடைந்தடைத்
திலங்கையர் கோனது வரையாகம்,
மலங்க வெஞ்சமத் தடுசரம்
துரந்தவெம் மடிகளும் வாரானால்,
இலங்கு வெங்கதி ரிளமதி
யதனொடும் விடைமணி யடும்,ஆயன்
விலங்கல் வேயின தோசையு
மாயினி விளைவதொன் றறியேனே. 8.5.7

பெரிய திருமொழி.748

பாசுர எண்: 1695

பாசுரம்
முழுதிவ் வையகம் முறைகெட
மறைதலும் முனிவனும் முனிவெய்தி,
மழுவி னால்மன்னர் ஆருயிர்
வவ்விய மைந்தனும் வாரானால்,
ஒழுகு நுண்பனிக் கொடுங்கிய
பேடையை யடங்கவஞ் சிறைகோலி,
தழுவு நள்ளிருள் தனிமையிற்
கடியதோர் கொடுவினை யறியேனே. 8.5.8

பெரிய திருமொழி.749

பாசுர எண்: 1696

பாசுரம்
கனஞ்செய் மாமதிள் கணபுரத்
தவனொடும் கனவினி லவன்தந்த,
மனஞ்செ யின்பம்வந் துள்புக
வெள்கியென் வளைநெக இருந்தேனை,
சினஞ்செய் மால்விடைச் சிறுமணி
ஓசையென் சிந்தையைச் சிந்துவிக்கும்,
அனந்த லன்றிலின் அரிகுரல்
பாவியே னாவியை யடுகின்றதே. 8.5.9

பெரிய திருமொழி.750

பாசுர எண்: 1697

பாசுரம்
வார்கொள் மென்முலை மடந்தையர்
தடங்கடல் வண்ணனைத் தாள்நயந்து,
ஆர்வத் தாலவர் புலம்பிய
புலம்பலை அறிந்துமுன் உரைசெய்த,
கார்கொள் பைம்பொழில் மங்கையர்
காவலன் கலிகன்றி யொலிவல்லார்,
ஏர்கொள் வைகுந்த மாநகர்
புக்கிமை யவரொடும் கூடுவரே. (2) 8.5.10

Enter a number between 1 and 4000.